சூரிய மின் உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் என்று மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘‘சூரிய மின் உற்பத்தி தொடர்பாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மேலைநாடுகளில் தொடர் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களைவிட தொழில்நுட்பத்தை உருவாக்கும் வாய்ப்பு நம்மிடம் இல்லை.
மேலைநாட்டு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. அதுபோல விரைவில் சூரிய மின் உற்பத்தியிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும்’’ என்றார்.