கோப்புப் படம் 
தமிழகம்

‘கரோனா கொல்லி மைசூர்பா’ விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’

செய்திப்பிரிவு

கோவையில் 'கரோனா கொல்லி மைசூர்பா' என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதாக, கடை முகவரியுடன் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சித்த மருத்துவக் குழுவினர் தொட்டிபாளையத்தில் செயல்படும் ஒரு ஸ்வீட்ஸ் கடையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, எந்த முன் அனுமதியும் பெறாமல், மூலிகை மைசூர்பா, கரோனா கொல்லி மைசூர்பா என்று கூறி 50 கிராம் பாக்கெட் ரூ.50-க்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

இதுதொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறும்போது, “கரோனா கொல்லி மைசூர்பாவில் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, திரிபலா, மஞ்சள், முருங்கை இலை, அகத்தி இலை, கற்பூரவல்லி இலை ஆகியவை உள்ளடங்கிய 19 மூலிகைகள் உள்ளதாகவும், இந்த மைசூர்பா கரோனாவை ஒரே நாளில் குணப்படுத்தும் என்றும் கூறி விற்பனை செய்துவந்துள்ளார். கடையில் இருந்த 120 கிலோ மைசூர்பா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தவறான விளம்பரம் செய்து விற்பனை செய்ததற்காக கடைக்காரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்படுகிறது. கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT