திமுக ஆட்சியைவிட, இந்த ஆட்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு 3 மடங்குக்கும் அதிகமாக ரூ.572.09 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:
சென்னை நேரு விளையாட்டரங்கில் உள்ள பயிற்சி ஓடுதள வளாகத்தில் ஸ்குவாஷ், இறகுப் பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக நீர் சிகிச்சை நீச்சல் குளம் போன்ற விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் ரூ.12 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் பன்னாட்டு அளவிலான போட்டிகளை நடத்த ஏதுவாக ரூ.3.50 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு வீரர்கள் தங்க ஏதுவாக விடுதிகள் படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக், ஆசியன், காமன்வெல்த், தெற்காசியா மற்றும் தேசிய போட்டிகளில் பதக்கம் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகை பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில், இத்துறைக்கு ரூ.170.04 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்த ஆட்சியில் தற்போது வரை ரூ.572.09 கோடி அதாவது 3 மடங்குக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு போட்டிகளை தொடர்ந்து நடத்த ஏதுவாக சென்னை வேளச்சேரி நீச்சல்குள வளாகம் ரூ.1.50 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.