தமிழகம்

புதிய மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

ஊரடங்கு காலகட்டத்தில் செலுத்தப்பட்ட முந்தைய மின் கட்டண அடிப்படையில் புதிய மின் கட்டணம் வசூலிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் முந்தைய மாதத்தில் செலுத்தப்பட்ட மின் கட்டண தொகைக்குப் பதிலாக அதற்கான யூனிட்டை கழித்துக்கொண்டு எஞ்சிய யூனிட்டுக்கான தொகையை 2 தனித்தனி பில்களாக பிரித்து மின் கட்டணம் வசூலிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேம லதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், புதிதாக மின் கணக்கீடு செய்யப்படும்போது ஏற்கெனவே செலுத்திய தொகையை கழித்துக்கொண்டு புதிதாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் எந்த விதிமீறலோ, தவறோ இல்லை என பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT