கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருங்காபுரி வட்டம் வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய 58 வயது பெண் செவிலியர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், கும்பகோணத்தைச் சேர்ந்த 55 வயது நபர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.
நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்துச் சென்றபோது உயிரிழந்த மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்த 62 வயதான பாத்திர வியாபாரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல காரைக்கால் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்த 60 வயது முதியவருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், காவலர் உட்பட 31 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் 21 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 12 பேருக்கும், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 3 பேருக்கும் நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரியில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 112 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,151 ஆக அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 71 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 70 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13 பேருக்கும் நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விருத்தாசலம் பஜார் தெருவைச் சேர்ந்த 62 வயதான முதியவர் உயிரிழந்தார்.