ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சையில் இருந்த 3 பேர் இன்று உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை, முதுகுளத்தூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று வரை 1474 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 953 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர், 23 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆனால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறந்த 2 பேரையும் சேர்த்தால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று 55 வயதுடைய கமுதி ஊராட்சி ஒன்றிய பிடிஓ உள்ளிட்ட 67 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் 1541 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மூன்று பேர் மரணம்:
சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதுகுளத்தூர் அருகே முத்துவியஜபுரத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நயினார்கோவில் ஒன்றியம் அரியாங்கோட்டையைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி, ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த 57 வயது ஆண் ஆகியோர் இன்று கரோனாவால் உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.