தென்காசி மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு தென்காசியில் இன்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் தலைமை வகித்தார். தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன், சங்கரன்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பால சுந்தரம், காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், சுரேஷ், மங்கையர்க்கரசி, சரஸ்வதி, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் முருகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், புகார் மனுக்களை விசாரிக்கும் முறை, காவல் நிலைய ஆவணங்களை பராமரிப்பது போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் தென்காசி மாவட்ட காவல்துறையின் செயல்பாடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர்களின் குறைகளையும், காவல் பணியின்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர். தடயவியல் நிபுணர் ஆனந்தி, மருத்துவர் சிவா ஆகியோரும் ஆலோசனைகளை வழங்கினர்.