தமிழகம்

கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தக்கோரி வழக்கு

கி.மகாராஜன்

நீதிமன்றத்தில் கைதிகளை ஆஜர்படுத்தும் முன்பு முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும் என உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் அர்ஜூனன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டது முதல் சிறையில் அடைத்தது வரை சட்ட விதிகளை போலீஸார் முறையாகப் பின்பற்றவில்லை.

இருவரையும் கைது செய்ததும் உறவினர்களுக்கு சட்டப்படி தகவல் தெரிவிக்கவில்லை.

சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் முன்பு இருவரையும் ஆஜர்படுத்திய பிறகு, அவர்களை சாத்தான்குளத்துக்கு மிக அருகே இருக்கும் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லாமல் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி கிளை சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறையில் அடைப்பதற்கு முன்பு இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாதது இருவரின் இறப்புக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.

எனவே, தமிழகம் முழுவதும் கைதிகளை நீதித்துறை நடுவரிடம் ஆஜர்படுத்தும் முன்பு குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி கைதிகளை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உடல் தகுதிச் சான்று பெறுவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.

மேலும் சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT