தமிழகம்

வெள்ளலூர் அதிவிரைவுப்படை மைதானத்தில் 20 ஆயிரம் மரக்கன்றுகள்: கோவையில் பசுமையை அதிகரிக்க முயற்சி

ஆர்.கிருஷ்ணகுமார்

கோவை மாவட்டம் வெள்ளலூரில் உள்ள, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் அதிவிரைவுப்படை மைதானத்தில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் அதிவிரைவுப் படை கமாண்டன்ட் ஜெயகிருஷ்ணன், துணை கமாண்டன்ட் ஜி.தினேஷ், இரண்டாம் நிலை கமாண்டன்ட் எஸ்.கே.துபே, எஸ்.எஸ்.வி.எம். கல்விக் குழும நிறுவனர் டாக்டர் மணிமேகலை மோகன், சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை நிறுவனர் சிவனேசன், தலைவர் சசிகலா, இயக்குநர் பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அறக்கட்டளைத் தலைவர் சசிகலா கூறும்போது, “கோவை நகரில் பசுமையை ஏற்படுத்த, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். அதன்படி, வெள்ளலூர் அதிவிரைவுப்படை மைதானத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக்கவசங்கள் அணிந்து, 20,000 மரக்கன்றுகளை நட்டுவைத்துள்ளோம். வெறுமனே மரக்கன்றுகளை நட்டுவைப்பதுடன் நின்றுவிடாமல், முறையாகத் தண்ணீர் ஊற்றி, நீர்ப்பாசன மேலாண்மையைக் கடைப்பிடித்து, மரக்கன்றுகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கிறோம்” என்றார்.

நிகழ்ச்சியில், அதிவிரைவுப்படை அதிகாரிகள், அறக்கட்டளை உறுப்பினர்கள், எஸ்.எஸ்.வி.எம். பள்ளி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT