புதுச்சேரி ஆளுநர் மாளிகை அலுவலக ஊழியர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதியானதால் 48 மணி நேரத்துக்கு ராஜ்நிவாஸ் மூடப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இன்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. அதிகபட்சமாக இன்று ஒரேநாளில் 112 பேருக்குக் கரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் புதுவை மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கரோனா தொற்று பரவி வருவதால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்துத் துறை, புதுவை நகர அமைப்புக் குழுமம், புதுவை நகராட்சி அலுவலகம், காவல் நிலையங்களும் இதிலிருந்து தப்பவில்லை.
இந்நிலையில் புதுவை ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆளுநர் மாளிகை 48 மணிநேரத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் தொற்றுப் பரவலைத் தடுக்க 48 மணிநேரத்திற்கு மூடப்படுகிறது. ஊழியருக்கு ஏற்பட்டுள்ள தொற்றால் ஆளுநர் அலுவலகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆளுநர் கிரண்பேடி ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளார். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக ஆளுநர் மற்றும் அலுவலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நான்காம் தளத்தில் உள்ள அரசு செயலர் வீட்டில் பணிபுரிவோருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து செயலர் பணிபுரியும் நான்காம் தளம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்கிருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.