மதுரையில் கடந்த 2 வாரத்தில் 4 ஆயிரம் பேருக்கு ‘கரோனா’ தொற்று பரவியுள்ளது. முகக்கவசம் அணியாமலும், அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்க்காத மக்களாலும் கட்டுக்கடங்காமல் இந்த நோய்த் தொற்று உயர்கிறது.
கரோனாவை ஒழிக்க, அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, முகக்கவசம் அணிய வேண்டும், பொதுஇடங்களில் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் போன்ற அடிப்படை சுகாதார நடைமுறைகள் தமிழகம் முழுவதும் ஒரளவாது கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால், மதுரையில் மட்டும் இந்த விழிப்புணர்வு விஷயங்கள் தலைகீழாக நடக்கின்றன. அதனால், கட்டுக்கடங்காமல் உயர்ந்த சென்னையில் கூட தற்போது இந்தத் தொற்று நோய்ப் பரவல் வேகம் குறையும் நிலையில் மதுரையில் அசுர வேகமெடுத்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் மொத்தமே 493 கரோனா நோயாளிகள் என்ற அளவிலேயே பாதிப்பு இருந்தது. அதிலும் 65 சதவீதம் நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியிருந்தனர்.
அதனால், அடுத்த சில வாரங்களில் பரவல் குறையும் என எதிர்பார்த்த நேரத்தில் திடீரென்று தினமும் சராசரியாக 100 ஆகவும், 200 ஆகவும், 300 ஆகவும், தற்போது 350 என்ற சராசரியில் இந்தத் தொற்று நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது. அதுவும் 23-ம் தேதி முதல் இந்தப் பரவல் விகிதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது. 23-ம் தேதி வரை 988 பேர் மட்டுமே இந்த தொற்றுநோய்க்கு பாதித்திருந்த நிலையில் நேற்று 7-ம் தேதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,674 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று வரை பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்தால் கடைசி 2 வாரத்தில் மட்டுமே 4 ஆயிரம் பேர் இந்தத் தொற்று நோய்க்கு மதுரையில் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மொத்த பாதிப்பில் புறநகர் கிராமங்களை விட மதுரை மாநகராட்சி வார்டுகள்தான் அதிகம். மதுரை மாநகராட்சியில் இந்தத் தொற்று நோய் சமூக பரவலாகிவிட்டதோ என்று அச்சம் கொள்ளும் அளவில் மொத்தமுள்ள 100 வார்டுகளுக்கும் இந்த நோய் பரவியுள்ளது.
கடந்த 6-ம் தேதி வரை மட்டும் மாநகராட்சியில் இந்த தொற்று நோய் 2,356 பேருக்கு பரவியுள்ளது.
மண்டலம் 1-ல் 581 பேருக்கும், மண்டலம் 2-ல் 717 பேருக்கும், மண்டலம் 3-ல் 529 பேருக்கும் இந்த தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதில், 44வது வார்டு கே.கே.நகர், ரிசர்வ் லைன், 35-வது வார்டு மதிச்சியம், 28-வது வார்டு உத்தங்குடி, 25-வது வார்டு கன்னநேந்தல், 3-வது வார்டு ஆணையூர், 5-வது வார்டு பிபிகுளம், 6-வது வார்டு மீனாட்சிபுரம், 11-வது வார்டு பொன்னநகரம், 41-வது வார்டு நரிமேடு, 53-வது வார்டு பங்கஜம் காலனி, 56-வது வார்டு சின்ன அனுப்பானடி, 59-வது வார்டு மீனாட்சி நகர், 77-வதுவார்டு சுந்தராஜபுரம், 85-வது வார்டு ஜடமுனி கோவில் பகுதிகளில் மிக அதிகளவில் ‘கரோனா’ தொற்று பரவியுள்ளது.
அதனால், மாநகராட்சியில் மொத்தமுள்ள 8,443 தெருக்களில் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட 1,722 தெருக்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் வாங்கிக் கொடுக்க தனித்தனிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நோய் பாதிப்பு அதிகமுள்ள மதுரை மநாகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த ஊரடங்கால் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வழக்கத்திற்கு மாறாக தொற்று பரவல் அதிகரிக்கத்தான் செய்கிறது. நோயை உறுதி செய்வது முதல் சிகிச்சை பெறுவது வரை நோயாளிகள் பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
விரைவான பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் மாவட்டத்தில் கரோனா அதிகாரிகள் குழு எடுப்பதாகக் கூறும் நடவடிக்கைகள் அனைத்தும் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளன
பரிசோதனை முடிவுகள் வருவதற்கு 4 நாட்கள் ஆவதால் சிகிச்சை தொடங்குவதும் தாமதமாகிறது.
அதுவே உயிரிழப்பு அதிகரிப்பிற்கும், நோய்ப் பரவலுக்கும் முக்கியக் காரணமாக உள்ளது.
இந்தக் குறைபாடுகளை சரிசெய்ய தமிழக அரசு சென்னையைப் போல் மதுரை மாநகராட்சிக்கும் நோய் பரவலை தடுக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.