போலீஸாரின் மன அழுத்ததைக் குறைக்க யோகா பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி திண்டுக்கல்லில் நடந்தது.
திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாருக்கான யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. டி.ஐ.ஜி., எம்.எஸ்.முத்துச்சாமி தலைமை வகித்தார்.
எஸ்.பி., ஆர்.சக்திவேல் முன்னிலை வகித்தார். போலீஸார் பங்கேற்ற யோகா பயிற்சியில் டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆகியோரும் பங்கேற்றனர்.
தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சார்பு ஆய்வாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் 45 சார்பு ஆய்வாளர்கள் பங்கேற்றனர். டி.ஐ.ஜி., முத்துச்சாமி, எஸ்.பி., சக்திவேல் ஆகியோர் பயிற்சியில் கலந்துகொண்ட சார்பு ஆய்வாளர்களுக்கு, பொதுமக்களிடம் நடந்துகொள்ளும்விதம் குறித்து எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் டி.ஐ.ஜி., முத்துச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், திண்டுக்கல், தேனி மாவட்ட காவல்துறையினருக்கு மன அழுத்தத்தை குறைக்கவும், காவலர்கள் பொதுமக்களுடன் கனிவாக நடந்துகொள்ளவும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால் தங்களை பாதுகாத்துக்கொள்ள மூச்சுப்பயிற்சி அவசியம். இதன் மூலம் நுரையீரலை பாதுகாத்து கரோனா வராமல் பாதுகாத்துக்கொள்ள இந்த யோகா பயிற்சி பயனுள்ளதாக அமையும்.
திண்டுக்கல், தேனி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுடன் நல்லுணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர், என்றார்.