தமிழகம்

வர்த்தகர்கள் - காவலர்கள் கலந்தாய்வுக் கூட்டம்;  சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து குடந்தை டிஎஸ்பி ஏற்பாடு

கரு.முத்து

சாத்தான்குளத்தில் வணிகர்கள் இருவர் போலீஸ் விசாரணையின்போது மரணம் அடைந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் இந்தச் சம்பவம் குறித்த சிந்தனைகள் மக்களிடம் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், கரோனா காலத்தில் காவல்துறையினர் - வர்த்தகர்கள் இரு தரப்புக்கும் சுமுக உறவையும் புரிதலையும் உண்டாக்கும் விதமாக, வணிகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அவர்களுக்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார் கும்பகோணம் டிஸ்பியாக புதிதாகப் பதவியேற்றுள்ள பி.பாலகிருஷ்ணன்.

குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் வணிகர்கள் மத்தியில் பேசிய பாலகிருஷ்ணன், வணிகர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்புச் செயலாளர் வி.சத்தியநாராயணன், ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜிர்ஜிஸ், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் வேதம் முரளி, ஹோட்டல்கள் சங்கப் பொருளாளர் ரமேஷ் ராஜா, தமிழ்நாடு வர்த்தகர் நலக் கழக பிரதிநிதி சரவணன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .

கூட்டத்தின் முடிவில் வணிகர்கள், வாடிக்கையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. அதன்படி, கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறின்றி நிறுத்த வேண்டும். அதற்கு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டியதும் வலியுறுத்த வேண்டியதும் கடை உரிமையாளர்களின் பொறுப்பு. கடையின் பொருட்களை வீதியில் அடுக்கி, போக்குவரத்திற்கு இடையூறு செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்.

அரசு அறிவித்துள்ள நேரத்திற்குள் கடைகள் பூட்டப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் காவலர்கள் வந்து கடையை அடைக்கச் சொல்லும்படியான சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது. கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வணிகர்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மளிகை மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைகள் நடக்கும் பகுதிகளில் பகல் நேரத்தில் கனரக வாகனங்களிலிருந்து சரக்குகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. சரக்குகளைக் கையாயாளுவதற்கான நேரம் காவல்துறையால் வரையறை செய்து அறிவிக்கப்படும். அதன் மூலம், பெரிய கடைவீதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரமான தீர்வு காணப்படும். பாதுகாப்பு நலன் கருதி கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, கடையின் ஜன்னல்கள் மேற்கூரைகள், முன் கதவுகள் போன்றவற்றை மிகுந்த உறுதித் தன்மை வாய்ந்ததாக அமைப்பது போன்றவை மிகவும் அவசியமாகும்.

டிஸ்பியான பாலகிருஷ்ணன் வழங்கிய இந்த அறிவுரைகளை ஏற்றுக்கொண்ட வணிகர்கள், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என உறுதியளித்தனர்.

தற்போதுள்ள மன இறுக்கமான சூழ்நிலையில் மாநிலம் முழுவதும் இப்படிபட்ட இணக்கக் கூட்டங்கள் நடத்துவது அவசியம்.

SCROLL FOR NEXT