புதுச்சேரியில் உள்ள கடைகள், சந்தைகள் தொற்றுநோய் மையங்களாக மாறி வருவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக புதுச்சேரியில் தினமும் வழக்குகள் பதியப்படுகின்றன.
இன்றைய வழக்கு விவரங்களை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் வெளியிட்ட தகவல்:
''கோவிட்-19 குற்ற வழக்குகள் அதிகரிப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, கடைகள் விழிப்புணர்வின்றிச் செயல்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. கடைகள், சந்தைகள் போன்றவை தொற்றுநோய்களுக்கான மையங்களாக மாறி வருவதை இது காட்டுகிறது. கடை வைத்திருப்பவர்களும் அவர்களுடன் இணைந்து இருக்கும் சங்கங்களும் சேர்ந்து தாங்கள் அனைத்துப் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உங்களுடைய சேவை அளிக்கப்படும் என்பதைத் தெரியப்படுத்தவும். இந்தப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத கடைகள் அரைநாள் மூடப்பட்டு பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும்.
நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 70 புதிய நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் இந்தப் பரவல் 100 நபர்களுக்குப் பரவ வாய்ப்பு உள்ளது. வரும் முன் காப்பதே சிறந்தது . கரோனா பரவலைத் தடுக்க ஒத்துழையுங்கள். அனைவரின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் மட்டுமே கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும்''.
இவ்வாறு கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.