மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இவர், தேமுதிகவின் பொருளாளராக இருந்தார். 2011-ம் ஆண்டு மதுரை மத்திய தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
விஜயகாந்துடன்ஏற்பட்ட மனக்கசப்பால் அதிமுகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுந்தர்ராஜன் நேற்று காலை காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட இரங்கல் செய்தி: முன்னாள் எம்எல்ஏ ஆர்.சுந்தர்ராஜன் உடல் நலக்குறைவால் மரண மடைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்ற ஆர்.சுந்தர்ராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.