கரோனா ஊரடங்கால் குடும்பத்தில் நிலவும் வறுமையைப் போக்க, கிருஷ்ணகிரியில் பாதுகாப்புக்காக சிறுவனைப் போன்று உடையணிந்து சுக்கு டீ விற்பனை செய்து வருகிறார் அரசுப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை யைச் சேர்ந்த பெண் கூலித்தொழிலாளியின் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ஒரு பெண்ணுக்கு திரு மணமாகிவிட்டது.
இரண்டாவது பெண் குழந்தை 10-ம் வகுப்பும், மற்றொரு பெண் குழந்தை கிருஷ்ணகிரி அரசுப்பள்ளியில் 7-ம் வகுப்பும், கடைசி மகன் 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
ஆவின் பால் விற்பனை பூத் ஒன்று வைத்துக் கொடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனுக்கள் அளித்தும் பலனில்லை. தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக முற்றிலும் வருமானத்தை இழந்து தவிக்கும் இப்பெண், தனது 7-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையிடம் சுக்கு டீ தயாரித்து கொடுத்து, விற்பனைக்கு அனுப்பி வருகிறார்.
இதுதொடர்பாக அப்பெண் கூறும்போது, ‘‘சுக்கு டீ விற்பனையாகி கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறேன். மகளின் பாதுகாப்புக்காக சிறுவனைப் போன்று முழுக்கை உடை அணிவித்து, சுக்கு டீ விற்க அனுப்பி வைக்கிறேன்,’’ என்றார்