ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் எடப்பாடி பழனிசாமி அணி என்ற இரண்டு அணிகளாக அதிமுக பிரிந்தது. இந்நிலையில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன், சண்முகநாதன், செம்மலை, ஆறுகுட்டி, நட்ராஜ், சின்னராஜ், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன் ஆகிய 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
இவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அப்போது அதிமுகவில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோர் சபாநாயகரிடம் புகார் அளித்தனர். அதேபோல திமுக தரப்பிலும் புகார் அளிக்கபட்டது. ஆனால், சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ''சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது, அதே வேளையில் சபாநாயகர் இந்தப் புகார்கள் மீது 3 ஆண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது அதிருப்தி அளிப்பதாக உள்ளது. எனவே, சபாநாயகர் அவரின் அதிகாரத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்'' என நம்புவதாகத் தெரிவித்து மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன.
ஆனால், சபாநாயகர் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காததையடுத்து, திமுகவின் கொறடா சக்கரபாணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் உச்ச நீதிமன்றமே தனது தரப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது.
இந்த மனு நாளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.