விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது.
மேற்குத் தொடர்ச்சிமலை சேத்தூர் வனப்பகுதிக்கு உட்பட்ட பிராவடியான் பீட் பகுதியில் நேற்று இரவு காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 10 கி.மீட்டர் தூரத்திற்கு தீ பரவியதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து தீ பரவி வருவதால் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் தீத்தடுப்புக் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ வேகமாக எரிந்து கொண்டிருப்பதால் தீயைக் கட்டுப்படுத்துவது சிரமம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், காட்டுத் தீயினால் அரியவகை மூலிகைச் செடிகள் உட்பட ஏராளமான மரங்கள், செடிகள் எரிந்து சாம்பலாகி வருவதாகவும், வனவிலங்குகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக விரோதிகளால் வனப்பகுதியில் தீ வைக்கப்பட்டதா அல்லது வெயிலின் தாக்கத்தால் தீபிடித்ததா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.