நவீன மருத்துவத்துக்கு வழங்கப்படுவது போல சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன் கண்டுபிடித்துள்ள இம்ப்ரோ என்ற கரோனா நோய் தடுப்பு மருந்தை மத்திய அரசு ஆய்வுக்கு உட்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மத்திய மாநில அரசுகள் சுகாதாரத்துறைக்கு பெருமளவு நிதியை ஒதுக்கினாலும், அதில் 90 சதவீத நிதியை நவீன மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசு 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஆயுஷ் அமைச்சகத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கியது. இதில் சித்த மருத்துவத்துக்கு தனியாக ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை.
பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவம் தற்போது மறைந்து வருகிறது. தற்போதைய தலைமுறையினர் துரித உணவுகளில் அதீத ஆர்வம் காட்டுவதால் பாட்டி வைத்தியம் உள்ளிட்ட நமது பாரம்பரிய வைத்தியங்கள் மறக்கப்பட்டு வருகின்றன. சித்த மருத்துவம் இயல்பிலேயே உணவே மருந்து என்பதை அடிப்படையாகக் கொண்டது.
நாம் உணவில் பயன்படுத்தும் இஞ்சி, மஞ்சள், சுக்கு, மிளகு போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் உள்ளன. இதனாலேயே கரோனா தொற்றால் பிற நாடுகளை, மாநிலங்களை ஒப்பிடுகையில் இறப்பு விகிதம் தமிழகத்தில் 1.3 சதவீதமாகவும், கேரளாவில் 0.5 சதவீதமாகவும் உள்ளது.
சித்த மருத்துவம் பழங்காலம் தொட்டே பயன்பாட்டில் உள்ளது. அதன் முக்கியத்துவம் கருதியே ஓலைச்சுவடிகளில் அது தொடர்பான குறிப்புகள் கண்டறியப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 3 சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. அவற்றில் போதுமான ஆராய்ச்சி வசதிகள் இல்லை. ஆனால், நவீன மருத்துவ முறை ஆராய்ச்சிக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு மக்களிடம் அதிகளவில் பரவலாக்கப்பட்டு வருகிறது.
சித்த மருத்துவத்திற்கு இன்னும் சிறிது பங்களிப்பை வழங்கினால் ஒரு சாதாரண மனிதன் செலவிடும் மருத்துவ தொகையில் பெருமளவு குறையும். யோகாவை போலவே சித்த மருத்துவமும் நமது நாட்டிற்கும் இந்த உலகத்திற்கும் கிடைத்த ஒரு பரிசு.
எனவே, சித்த மருத்துவத்தின் அடிப்படையிலான மருந்துகளையும் முறையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி முடிவுகளின் அடிப்படையில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் கரோனோ தடுப்பு தொடர்பாக மாநில அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்குழுவினர் கரோனாவுக்கு பிறகு மேலும் பல்வேறு மருத்துவர்களை சேர்த்துக் கொண்டு நவீன மருத்துவ ஆராய்ச்சியில் மேற்கொள்ளப்படுவது போல் நவீன முறைகளை கையாண்டு சித்தர்கள் எழுதி வைத்திருந்ததை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து சித்த மருத்துவ மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.