தமிழகம்

கரோனா பாதிப்பு விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும்: தூத்துக்குடி ஆட்சியரிடம் திமுக எம்.எல்.ஏ.,க்கள் மனு

ரெ.ஜாய்சன்

கரோனா பாதிப்பு விவரங்களை முழுமையாக வெளியிட வலியுறுத்தி திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை இன்று நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று அபாயகரமான நிலையில் பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என மக்கள் கருதுகின்றனர். கரோனா பாதிப்பு குறித்து மாவட்ட மக்கள் மிகுந்த அச்சத்துடனும், குழப்பத்துடனும் உள்ளனர்.

கரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை சார்பில் தினமும் வெளியிடப்படும் அறிக்கையில் முழுமையான விவரங்கள் இல்லை. பல முக்கியத் தகவல்கள் மறைக்கப்படுகின்றன. எனவே, கரோனா பாதிப்பு குறித்த முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும்.

மாவட்டத்தில் எத்தனை கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன, கரோனா பரிசோதனை செய்ய எந்தெந்த மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது, தினமும் எத்தனை பேருக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது, தினமும் எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது, தினமும் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர், எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளனர், எத்தனை நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன என்பன போன்ற விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT