கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.150 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையை பெற்றுத் தர அரசு உதவ வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், கரும்புக்கான கொள்முதல் விலை குறைக்கப்படாமல் டன்னுக்கு ரூ.2650 என்ற அளவில் வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இனிப்பான சர்க்கரையை வழங்கும் கரும்பை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளின் நிலைமை தமிழ்நாட்டில் மிகவும் கசப்பானதாக மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்த தனியார் சர்க்கரை ஆலைகள் அதற்காக தர வேண்டிய விலையில், ரூ.150 கோடிக்கும் அதிகமான தொகையை கடந்த பல மாதங்களாக வழங்காமல் இழுத்தடித்து வருகின்றன.
கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதன் பின் இரண்டு ஆண்டுகளாகியும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 2013-14 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு 2100 ரூபாயை மத்திய அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் மாநில அரசின் பரிந்துரை விலையாக டன்னுக்கு ரூ.650 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதையும் சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.2750 விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழக அரசு மாநில அரசின் பரிந்துரை விலையை ரூ.550 ஆக குறைத்து ஒரு டன்னுக்கு ரூ.2650 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று அறிவித்தது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்துவிட்டதால் ஒரு டன்னுக்கு ரூ.3500 வழங்கப்பட வேண்டும் என்று உழவர் அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில் தமிழக அரசின் முடிவு கரும்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய கரும்பு அரவைப் பருவம் பெரும்பாலான ஆலைகளில் கடந்த 25 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலை விவசாயிகளுக்கு இன்னும் வழங்கப்பட வில்லை. ஒருசில சர்க்கரை ஆலைகள் மட்டும் கொள்முதல் செய்யப்பட்ட கரும்பில் ஒரு பகுதிக்கு கொள்முதல் விலையை வழங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் ரூ.150 கோடிக்கும் அதிகமான தொகை விவசாயிகளுக்கு பாக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் அடுத்த பருவ கரும்பு சாகுபடியை தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, சக்கை, ஆலைக்கழிவு, மது தயாரிப்புக்கான மொலாசஸ் உள்ளிட்ட அனைத்து துணைப் பொருட்களையும் தனித்தனியாக விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டும் தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கொள்முதல் விலையை மட்டும் தராமல் தாமதப்படுத்தி வருகின்றன.
இவ்வாறு தாமதப்படுத்துவதன் பின்னணியில் பெரும் சதி இருப்பதாகவே தோன்றுகிறது. கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ. 2650 நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த ஆண்டின் விலையான ரூ.2250 மட்டுமே வழங்க தனியார் சர்க்கரை ஆலைகள் முடிவு செய்துள்ளன. இதுவரை பணம் வழங்கப்பட்டவர்களுக்குக் கூட டன்னுக்கு ரூ.2100 அளித்துள்ள ஆலைகள், இன்னும் ரூ.150 மட்டும் பின்னர் வழங்கப்படும் என கூறியுள்ளன.
கரும்பு விவசாயிகளுக்கு பெரும் தொகையை பாக்கி வைத்துவிட்டு, ஆலைகள் கடுமையான நட்டத்தில் இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.2250 ஆக குறைத்து விடலாம் என்று ஆலை நிர்வாகங்கள் திட்டமிடுகின்றன. அரசு நிர்ணயித்த ஆதரவு விலையை ஆலைகள் வழங்க மறுப்பது அரசுக்கு விடப்படும் சவால் ஆகும். இந்த சதியை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழகத்தில் கரும்பு சாகுபடி குறைந்து விடும் ஆபத்து இருக்கிறது.
எனவே, கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வழங்க வேண்டிய பாக்கித் தொகை ரூ.150 கோடியையும் முழுமையாகப் பெற்றுத் தருவதுடன், கரும்புக்கான கொள்முதல் விலை குறைக்கப்படாமல் டன்னுக்கு ரூ. 2650 என்ற அளவில் வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.