ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனைச் சந்தையில் கடை உரிமையாளருக்குக் கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, வெளியிடங்களுக்குக் காய்கறிகள் அனுப்புவது நிறுத்தப்பட்டு பத்தலப்பள்ளி காய்கறிச் சந்தை மூடப்பட்டது.
ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனைச் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட கடைகளில் காய்கறிகள் விற்பனை நடைபெறுகிறது. ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் விற்பனைக்காக பத்தலப்பள்ளி சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினமும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கரோனா எதிரொலியாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக முதல் முறையாக பத்தலப்பள்ளி சந்தை மூடப்பட்டது. பின்பு கடந்த ஜூன் 1-ம் தேதி ஊரடங்கு தளர்வு காரணமாக இந்தச் சந்தை மீண்டும் திறக்கப்பட்டு வெளியிடங்களுக்குக் காய்கறி அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. மேலும் கூட்ட நெரிசலில் கரோனா தொற்றுப் பரவாமல் இருக்க இந்தச் சந்தை தக்காளிச் சந்தை, வெங்காயச் சந்தை, இதர காய்கறிகள் சந்தை என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.
இந்நிலையில் இந்தச் சந்தையில் காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒரு கடை உரிமையாளருக்கு சமீபத்தில் நடத்திய கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனையின் கரோனா தனி வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனைச் சந்தையில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு வெளியிடங்களுக்குக் காய்கறிகள் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
ஓசூர் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனை சந்தையின் இரண்டு பிரதான நுழைவுவாயில் கேட்டுகளுக்குப் பூட்டுப் போட்டு மூடப்பட்டது.