கோரையில் லாபம் கண்டு வருகிறார் சேத்தியாத்தோப்பு விவசாயி ஒருவர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் விவசாயத்தில் வழக்கமான நெல், உளுந்து, பயறு விவசாயம் செய்தும் சரியான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
இவர் சொந்த விஷயமாக கரூருக்கு சென்ற போது அங்கு பலர் கோரைகள் பயிர் செய்துள்ளதை பார்த்துள்ளார். பின்னர் இதுகுறித்து அங்குள்ள விவசாயிகளிடம் கேட்டறிந்துள்ளார். அவர்கள் கோரைப்பற்றிய விவரம் மற்றும் சாகுபடி முறைகளை விளக்கமாக எடுத்துக்கூறினர். இதை விவசாயம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றனர். அதனை கெட்டியாக பிடித்துக்கொண்ட ராமச்சந்திரன், ஊர் திரும்பிய உடன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதற்கு குடும்பத்தினர் முட்டுக்கட்டை போட்டுள்னர்.
ஆனால், ராமச்சந்திரன் அதனை கேட்காமல் தனது நான்கு ஏக்கர் வயலில் கோரையை பயிரிட்டார். இவர் கோரையை பயிர் செய்வதை பார்த்த அப்பகுதி விவசாயிகள், "உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை? பிழைக்கத் தெரியாதவன்" என கிண்டலும், கேலியும் செய்தனர். ஆனால் அவர் சோர்ந்து போகவில்லை.
இந்த நிலையில், அவருக்கு கோரை கைகொடுத்தது. பயிர் செய்த ஓராண்டிலிருந்து கோரை அறுவடைக்கு தயாரானது. இவர் கோரையை அறுவடை செய்ய தொடங்கியதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் நேரடியாக வயலுக்கே வந்து கோரையை வாங்கி சென்றார்கள். இதனால் கோரை பணமாக மாறியது. மகிழ்ச்சியில் திளைத்தார் ராமச்சந்திரன்.
இது குறித்து அவர் கூறுகையில், "பலரும் கோரையைப்பற்றி தெரியாத காரணத்தினாலும், இதில் எவ்விதமான லாபம் உள்ளது என புரியாமலும் எடுத்த எடுப்பிலேயே இதனை ஒதுக்கிவிடுகிறார்கள். நான் கடந்த எட்டாண்டுகளுக்கு முன்பு பயிர் செய்ய ஆரம்பித்தேன். ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை. ஒருமுறை பயிர் செய்தால் பத்தாண்டுகளுக்கு மேல் அதிலிருந்து அறுவடை செய்யலாம். அள்ள அள்ள குறையாத வருமானம். எல்லா வகையான காலநிலையிலும் கோரையை வளர்க்கலாம்.என்னிடம் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளம் சம்பளம் கொடுக்கிறேன்.
எனக்கு வழக்கமான விவசாய சாகுபடியிலிருந்து கிடைக்கும் வருமானத்தைவிட கோரையில் அதிக அளவில் வருமானம் வருகிறது. அதாவது, செலவு இல்லாமல் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் கிடைக்கிறது. நானும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் உள்ளோம்" என்றார்.