விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரையிடம் பொன்முடி எம்எல்ஏ மனு ஒன்றை அளித்தார். 
தமிழகம்

கரோனா தொற்று தொடர்பான அரசின் அறிக்கையில் உண்மைத்தன்மை இல்லை; பொன்முடி குற்றச்சாட்டு

எஸ்.நீலவண்ணன்

கரோனா பாதிப்பு தொடர்பான சுகாதாரத்துறை வெளியிடும் அறிக்கையில் மாநகராட்சி ஒரு அறிக்கையும் அரசு ஒரு அறிக்கையையும் தருகிறது. எனவே இது உண்மையில்லாத அறிக்கையாகவே உள்ளது என்று திமுக எம்எல்ஏ பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரையிடம் இன்று (ஜூலை 7) திருக்கோவிலூர் எம்எல்ஏ பொன்முடி மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"விழுப்புரம் மாவட்டத்தில் பயிற்சி பெறும் காவல்துறையினர் 57 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சரியாக கவனிக்கவில்லை என்று புகார் வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யவில்லை எனப் புகார் வருகிறது.

கிராமப்புறங்களில் இந்நோய் வேகமாகப் பரவி வருகிறது. இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெறுபவர்கள், குணமடைந்தவர்கள் என்ற விவரங்களை 2 நாட்களுக்கு ஒருமுறை அந்தந்த எம்எல்ஏவிடம் பட்டியல் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும், கரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிடும் அறிக்கையில், மாநகராட்சி ஒரு அறிக்கையும், அரசு ஒரு அறிக்கையையும் தருகிறது. எனவே, இது உண்மையில்லாத அறிக்கையாகவே உள்ளது. தமிழக முதல்வர் மருத்துவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து கரோனா தொடர்பாக கருத்தரங்கு நடத்த முன்வர வேண்டும்.

இந்தியாவில் கரோனா வைரஸ் அதிகம் பரவும் 2-வது மாநிலமாக தமிழகம் வந்துள்ளது. இந்நோய் தமிழகத்தில் வராது என்ற அரசின் அதீத நம்பிக்கை, அதனால் ஏற்பட்ட கவனக்குறைவால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை இந்த அரசு ஊக்குவிக்கவில்லை. இதுகுறித்த அரசின் அறிக்கைகளில் உண்மைத்தன்மை இல்லை.

பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளிப்படையாக அறிவித்தால்தான் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முடியும்".

இவ்வாறு பொன்முடி கூறினார்.

SCROLL FOR NEXT