தமிழகம்

விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் அவசர மற்றும் திருத்தச் சட்டங்கள்; திரும்பப் பெறக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்

கரு.முத்து

மத்திய அரசு அண்மையில் அறிவித்த ‘மின்சார வரைவு திருத்தச் சட்டம் 2020’ உள்ளிட்ட திருத்தச் சட்டங்கள் மற்றும் அவசரச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடலூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

அனைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இந்த கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி, கடலூர் லாரன்ஸ் ரோடு கடவுள் ஜவான் பவன் அருகில் நடைபெற்றது.

இதில் மத்திய அரசின் மின்சார வரைவு திருத்தச் சட்டம் 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல்) அவசரச் சட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020 ஆகிய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டு கையெழுத்துகள் பெறப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் முடிவில், கையெழுத்து இயக்கத்தின் கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கிராமங்கள் தோறும் கையெழுத்து இயக்கத்தைத் தீவிரப்படுத்துவது என்றும், விவசாயிகளுக்கு பாதிப்பை உண்டாக்கும் அவசரச் சட்டம் மற்றும் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 27-ல் வீடுகள்தோறும் கருப்புக் கொடி ஏற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT