இந்திய ரயில்வே துறை முதல்முறையாக 2.8 கி.மீ. நீளம் கொண்ட சரக்கு ரயிலை இயக்கி சாதனை புரிந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடுமுழுவதும் பயணிகள்ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ரயில்வே அமைச்சகம் சரக்கு போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இதற்கிடையே, தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் நாக்பூர் பகுதியில் நிலக்கரி உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிச்செல்லும் 4 ரயில்களை இணைத்து 2.8 கி.மீ. நீளம் கொண்ட ரயில் உருவாக்கப்பட்டது. இந்த சரக்கு ரயிலை நாக்பூர் - கோர்பாவுக்கு இடையே இயக்கி புதிய சாதனை படைத்துள்ளது.
`ஷேஷ்நாக்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சரக்கு ரயில் இயக்கம் தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. இச் சாதனையை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார்.