திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை களப்பணியில் ஈடுபட்டுவரும் போலீஸாரைத் தொடர்ந்து அரசு அலுவலர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதையடுத்து போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில், மதுரை மாவட்ட எல்லையான பள்ளப்பட்டி சோதனைச் சாவடியில் பணிபுரிந்த போலீஸ்காரர் ஒருவருக்கு கரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அதே சோதனைச்சாவடியில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. களப்பணியில் இருக்கும் போலீஸாரை தொடர்ந்து கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் அரசு அலுவலர்களுக்கும் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஒருவருக்கு முதன்முதலில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடன் பணிபுரிந்த அரசு ஊழியர்களை பரிசோதித்ததில் இரண்டு அரசு அலுவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்ததில் ஒரு ஊராட்சி செயலர் மற்றும் ஆறு அரசு அலுவலர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அந்த அலுவலகம் மூடப்பட்டு தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஏற்கனவே ஆத்தூர் ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டநிலையில் தற்போது நத்தம் ஒன்றிய அலுவலகமும் மூடப்பட்டது.
இதேபோல் நரிக்கல்பட்டி அரசு ஆரம்பசுகாதாநிலையம் சுகாதாரப்பணியாளருக்கு கரோனா தொற்றால் மூடப்பட்டநிலையில் தற்போது பூச்சிநாயக்கன்பட்டியிலுள்ள ஆரம்பசுகாதாரநிலையத்தில் பணிபுரிந்துவரும் மருந்தாளுனருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆரம்ப சுகாதாரநிலையம் மூடப்பட்டது.
இன்று கன்னிவாடி அரசு ஆரம்பசுகாதாரநிலைய டாக்டருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து ஆரம்பசுகாதாரநிலையம் மூடப்பட்டது.
நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் இருவருக்கு கரோனா தொற்றால் காவல்நிலையம் மூடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் களப்பணியில் ஈடுபட்டுவரும் போலீஸாரை தொடர்ந்து அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருவது களப்பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.