சிவகங்கை அருகே நூறுநாள் வேலைத் திட்டத்தில் ஆளும்கட்சியினர் தலையீட்டால் சாலைப் பணி நிறுத்தப்பட்டதாக ஊராட்சித் தலைவி புகார் தெரிவித்துள்ளார்.
நூறு நாள் வேலைத் திட்டப் பணிகள் அனைத்தும் அந்தந்த ஊராட்சித் தலைவர்கள் மேற்பார்வையில் நடந்து வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை அருகே கீழப்பூங்குடி ஊராட்சியில் நூறுநாள் வேலைத் திட்டத்தில் பேரணிபட்டியில் இருந்து அய்யனார் கோயில் வரையில் 900 மீட்டருக்கும், கீழப்பூங்குடியில் இருந்து கொங்கு மாடை அய்யனார் கோயில் வரை ஒரு கி.மீ.,க்கும் கிராவல் சாலைகள் அமைக்கப்படுகின்றன.
இதற்காக ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது. இப்பணியை நேற்று ஊராட்சித் தலைவர் சண்முகவள்ளி தொடங்கினார். ஆனால் அந்த பணியை தங்களுக்கு ஒதுக்கிவிட்டதாக கூறி ஆளும்கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலைப் பணிகள் தொடங்குவது நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் சண்முகவள்ளி கூறியதாவது: 100 நாள் திட்டப் பணிகள் கிராமமக்களை பயன்படுத்தி செய்ய வேண்டிய பணி. இப்பணியை ஊராட்சித் தலைவர் மூலமாக தான் மேற்கொள்ள வேண்டும். ஆனால் எனக்கே தெரியாமல் வேறுசிலருக்கு பணியை ஒதுக்கிவிட்டதாக கூறுகின்றனர்.
ஏற்கெனவே கீழப்பூங்குடி ஊராட்சியில் வருவாய் இல்லாததால் 6 மாதங்களாக திட்டப்பணிகள் ஏதும் நடக்கவில்லை. தற்போது 2 சாலை பணிகளையும் ஆளும்கட்சியினர் தடுப்பது ஏற்க முடியாது, என்று கூறினார்.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ இருதரப்பினரிடமும் சுமுகமாகப் பேசி பணிகள் தொடங்கப்படும்,’ என்று கூறினர்.