அரசு மருத்துவர்களுக்கு அவர்கள் ஓய்வுபெறும்போது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் பாதி, ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் இப்போது மிக மூத்த மருத்துவர்கள் 1,640 பேரின் ஓய்வூதியத்தைக் குறைத்திருக்கிறது தமிழக அரசு. இந்தக் கரோனா நெருக்கடி காலத்தில் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை நியாயமற்றது என ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற மருத்துவர்கள் சங்கத் தலைவர் டி.ராஜகோபால் ’இந்து தமிழ்' இணையத்துக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
''அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்பதால், பணியில் சேர்ந்த ஆண்டை அடிப்படையாக வைத்து அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படும் என்று 2009-ம் ஆண்டு அரசு ஆணை பிறப்பித்தது.
பொதுவாக, அரசுப் பணியில் இருப்போருக்கு ஊதியம் உயரும்போது, ஓய்வு பெற்றோருக்கும் உயர்வு வழங்குவது நடைமுறை. அதன்படி, 2009 அக்டோபர் 23-ம் தேதிக்கு முன்னர் அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற, மருத்துவர்கள், பேராசிரியர்களும் ஓய்வூதிய உயர்வு கேட்டோம். காரணம், அந்தக் காலகட்டத்தில் ஓய்வுபெறும்போது ஊதியம் வெறும் ரூ.17 ஆயிரத்துக்குள் இருந்தவர்களுக்கு, ஓய்வூதியமாக வெறுமனே ரூ.8 ஆயிரம்தான் கிடைத்தது.
அரசு உடனே நடவடிக்கை எடுக்காததால், கமால் அப்துல் நாசர் என்ற மருத்துவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஓய்வூதிய உயர்வு ஆணையைப் பெற்றார். அதன் அடிப்படையில் மற்ற மருத்துவர்களும் கோரிக்கை வைத்ததன் பேரில், 12.7.2018-ல் ஓர் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அனைத்து மருத்துவர்களுக்கும் ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் நிதித்துறையானது, அரசின் நிதி நிலை மோசமாக இருப்பதைக் காரணம் காட்டி எங்களுக்கு ஓய்வூதிய உயர்வு வழங்கிய அரசாணையையே ரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறது. இதுகுறித்து அரசு எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ‘இந்த நோட்டீஸுக்கு பதில் விளக்கம் அளிக்காவிட்டால், அதை உங்களது சம்மதமாகக் கருதி ஓய்வூயத்தைப் பிடித்தம் செய்வோம்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து ஓய்வுபெற்ற மருத்துவர்கள் எல்லாம் கலந்தாலோசித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென இந்த மாதமே அதை நடைமுறைப்படுத்திவிட்டது அரசு.
குறிப்பாக, மயிலாடுதுறை, தூத்துக்குடி ஆகிய கருவூலங்களில் இருந்து ஓய்வூதியம் பெறும் மருத்துவர்களின் ஓய்வூதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அரசு ஆணை ரத்து செய்யப்படுவதாக ஆணை பிறப்பித்த பின்னர்தான், சம்பளத்தைப் பிடித்தம் செய்ய முடியும். ஆனால், அப்படி எதையுமே செய்யாமல், திடீரென இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது வயதில் மூத்த மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோவிட் தொற்று கடுமையாக உள்ள இந்த நேரத்தில் மூத்த மருத்துவர்கள் மீது தொடுக்கப்பட்ட மோசமான தாக்குதல் இது.
எப்போதெல்லாம் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பென்ஷன் உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. தெலங்கானா மாநிலத்தில் ஓய்வூதியம் குறைக்கப்பட்டதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், அது சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம்.
அரசாணை 236 -ன் படி தமிழகத்தில் திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் மருத்துவர்கள் வெறுமனே 1,640 பேர்தான். அவர்களுக்கு ஓய்வூதியத்தைக் குறைப்பதால் அரசுக்கு வெறுமனே சில கோடி ரூபாய் மட்டும்தான் மிச்சமாகும். எனவே, நியாயமற்ற, ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்''.
இவ்வாறு ராஜகோபால் தெரிவித்தார்.