தமிழகம்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பிச் சென்ற காரின் உரிமையாளரிடம் விசாரணை- சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை

ரெ.ஜாய்சன்

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பிச் சென்ற காரின் உரிமையாளரிடம் சிபிசிஐடி போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில், ஆய்வாளர் ஸ்ரீதர் காரில் தேனிக்கு தப்பிச் சென்ற போது, சிபிசிஐடி போலீஸார் அவரை துரத்திச் சென்று கங்கைகொண்டான் சோதனை சாவடி அருகே மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் தப்பிச் சென்ற காரை சிபிசிஐடி போலீஸார் பறிமுதல் செய்து, கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர். இந்த கார் சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பருக்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன்பேரில் பாஜக அமைப்புசாரா அணியின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் சுரேஷ்குமார் இன்று தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.

அவரிடம், ஐஜி சங்கர், எஸ்வி விஜயகுமார் உள்ளிட்ட சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தனது காருக்கான ஆவணங்களை சுரேஷ்குமார் சமர்பித்தார். இதையடுத்து காரை எடுத்துச் செல்ல அவருக்கு போலீஸார் அனுமதி அளித்தனர். இது குறித்து சுரேஷ்குமார் கூறியதாவது:

"நான் எனது காரை சென்னையில் வாடகை கார் நிறுவனம் நடத்தி வந்த நெல்லையைச் சேர்ந்த கணேச பாண்டியன் என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுத்திருந்தேன். இந்நிலையில் கணேச பாண்டியன் நெல்லைக்கு வந்துவிட்டதால், அந்தக் காரையும் நெல்லைக்கே கொண்டு வந்துவிட்டார். எனது கார் பற்றிய எந்த விவரங்களையும் அவர் என்னிடம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் எனது காரை டிவி செய்தியில் பார்த்து காவல் துறையினரை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தேன். இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு அழைத்ததன் பேரில் இங்கே வந்து ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு காரை எடுத்துச் செல்கிறேன்" என்றார் அவர். இதையடுத்து கார் எப்படி ஆய்வாளரிடம் சென்றது என்பது குறித்து சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை தீவிரம்:

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பென்னிக்ஸின் நண்பர்கள் 2 பேரிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றிய பியூலா, சிசிடிவி கேமிரா ஆபரேட்டராக பணியாற்றிய காவலர் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட காவலர்களையும், சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

மேலும், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த ராஜா, இசக்கிதுரை ஆகியோரும் இன்று விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இது குறித்து ஐஜி சங்கர் கூறும்போது, சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸார், அவர்களுடன் இணைந்து செயல்பட்ட கரோனா தன்னார்வலர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நண்பர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், கைது செய்யப்பட்ட போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் அவர்.

SCROLL FOR NEXT