திமுகவுக்குள் குழப்பம் இருப்பதால் ஸ்டாலின் மக்களையும் குழப்புகிறார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கரோனா தொற்று அதிகரிக்கும் சூழலில் ஒத்தக்கடை விவசாயக் கல்லூரி, தோப்பூர் கோவிட் கேர் சென்டர்களை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதாரப் பணிகள் மண்டல இணை இயக்குநர் பிரியா ராஜேஷ், ஆட்சியர் டிஜி. வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கரோனாவை தடுக்க, முதல்வர் ஆலோசனையின்படி, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
37 மாவட்டங்களிலும் நிவாரணத் தொகுப்புகள் மற்றும் தொற்று ஏற்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவிலே அதிகமானோர் குணமடையும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
நோயின் ஆரம்ப நிலையைக் கண்டறிய நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் 21 கல்லூரியில் கோவிட் கேர் சென்டர்கள் உருவாக் கப்பட்டுள்ளது. இதில் நான்கு சென்டர்களில் சிகிச்சை பெறுவோருக்கு ஜெயலலிதா பேரவை யின் சார்பில் மூன்று வேளை புரதம் நிறைந்த உணவுகளும், தேவையான மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த இக்கட்டான காலத்திலும் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு பயனற்ற அறிக்கைகளைக் கொடுத்து பீதியடையச் செய்கின்றனர். அரசு அதிகாரி மாற்றத்திலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்கிறார்.
அவரது கட்சியின் கொள்கை பரப்பு செயலர் ஆ.ராசா சாத்தான்குளம் விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை தேவையில்லை என்கிறார். இவர்கள் கட்சிகுள்ளேயே குழப்பத்தில் உள்ளனர். அவர்கள் தமிழக மக்களையும் குழப்புகின்றனர்.
மதுரையில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாம்களில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.