கரோனா பரவலைத் தடுப்பதற்காக எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய 32 கேள்விகளைக் கொண்ட கோரிக்கை மனுவை புதுக்கோட்டை ஆட்சியரிடம் திமுகவினர் இன்று (ஜூலை 6) அளித்தனர்.
அதில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனை இடங்களில் கரோனா பரிசோதனை மையம், சிகிச்சை மையம் உள்ளன? மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள், அவர்களில் எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது?.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மாவட்டத்துக்கு எத்தனை பேர் வந்துள்ளனர்? அவர்களில் எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது? அவர்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?.
சிகிச்சை மையங்களில் எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன?, அதில் எத்தனை படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது?" என்பன உள்ளிட்ட 32 கேள்விகளை உள்ளடக்கிய மனுவை புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியிடம் திமுக எம்எல்ஏக்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், பெரியண்ணன் அரசு ஆகியோர் வழங்கினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் எஸ்.ரகுபதி கூறியபோது, "கரோனா தடுப்பு பணிக்காக வாங்கப்பட்ட கிருமிநாசினி, தண்ணீர் தொட்டிகளுக்கு பன்மடங்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்து பண மோசடி நடைபெற்றுள்ளது.
இதேபோன்று, மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்குவதிலும் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. கரோனா வார்டில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு முறையான வசதிகளை செய்து தனிப்படுத்த அனுமதிப்பதில்லை.
எனவே, கரோனா பரவலைத் தடுப்பதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், அதற்கான நிதி விவரம், பரிசோதனை விவரம் போன்றவற்றை உள்ளடக்கிய 32 கேள்களைக் கொண்ட கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்