தமிழ்நாடு, கேரளம் போன்று புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் தரக்கோரி இடதுசாரிகள் கூட்டாக வரும் 9-ம் தேதி போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர்.
இடதுசாரிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது:
"புதுச்சேரி காங்கிரஸ் அரசு பொது விநியோகத் திட்டத்தை மாநில நிதியிலிருந்து செயல்படுத்தத் தவறியுள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தலைமை செயலாளர் அஸ்வினி குமார் ஆகியோரின் கண்மூடித்தனமான முடிவால் நியாயவிலைக் கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. நியாயவிலைக் கடைகளை மூடுவதால் பொது விநியோக முறை அழியும். இது ஏழை மக்களின் நலன்மீது அக்கறை இல்லாத செயல்.
பேரிடர் காலத்தில் அரிசி வழங்கும் பணியில் நியாயவிலைக் கடை ஊழியர்களை ஈடுபடுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடை போடுகிறார். தமிழ்நாடு, கேரளம் போன்று இதர மாநிலங்களைப் போல பொது விநியோகத் திட்டத்தை மீண்டும் புதுச்சேரியில் செயல்படுத்திட வேண்டும். அத்தியாவசிய பண்டங்களான அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், உள்ளிட்ட பொது விநியோக முறையை நியாயவிலைக் கடைகள் மூலமாக செயல்படுத்திட வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகம், துணைநிலை ஆளுநர் மாளிகை மற்றும் புதுச்சேரி, காரைக்கால், மாஹே பகுதிகளில் அனைத்து நியாயவிலைக் கடைகள் முன்பும் தர்ணா நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தனர்.