தமிழகம்

தமிழக முதல்வரின் தொகுதிக்கு காவிரி நீரை கொண்டு செல்வதற்கு எதிராக வழக்கு: காவிரி மேலாண்மை ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

தமிழக முதல்வரின் சொந்த தொகுதியான எடப்பாடிக்கு காவிரி உபரி நீரை கொண்டு செல்லும் திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் , தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

காவிரி விவசாயிகள் சங்கச் செயலர் பி.ஆர்.பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலம் காவிரி நீரால் பாசன வசதி பெறுகின்றன. காவிரி வழக்கில் தமிழகத்துக்கு முதலில் 192 டிஎம்சி தண்ணீரும், பின்னர் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்படும் காவிரி நீரை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதாக இருந்தால் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்திடம் அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு எந்த அனுமதியும் பெறாமல் டெல்டா பாசனத்துக்கு வழங்கப்படும் காவிரி உபரி நீரை எடப்பாடிக்கு கொண்டுச் செல்லும் ரூ.565 கோடி மதிப்பிலான திட்டத்தை நிறைவேற்ற தமிழக பொதுப்பணித்துறை 12.11.2019-ல் அரசாணை பிறப்பித்தது.

தமிழக முதல்வரின் சொந்த தொகுதிக்கு நன்மை செய்யும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது உச்ச் நீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு சட்டப்பேரவையில் விவாதம் நடத்தப்படவில்லை.

கரோனா தொற்று பரவி வரும் சூழலில் திட்டத்தை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனவே திட்டம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். திட்டத்தை நிறைவேற்ற இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வழக்கறிஞர் வீரகதிரவன், உபரி நீரை கொண்டுச் செல்வதாக கூறுகின்றனர். ஆனால், ஆனால் அணையிலிருந்து தண்ணீர் எடுத்து நீரேற்று நிலையம் மூலமாக எடப்பாடிக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலருக்கு ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT