தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் சாட்சிகளிடம் விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தொடங்கியுள்ளனர். பென்னிக்ஸின் நண்பர்கள் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ரவிசங்கர், ரவிச்சந்திரன், மணி மாறன், சங்கரலிங்கம், ராஜாராமன் ஆகிய 5 பேரும் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்கள்.
அவர்களிடம் கடந்த 19-ம் தேதி இரவு மற்றும் 20-ம் தேதி பகலில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.
சாத்தான்குளத்தில் முகாமிட்டுள்ள மற்றொரு குழு வினர் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் கூறும்போது, இந்த வழக்கில் இதுவரை 15 சாட்சி களிடம் விசாரணை செய்துள்ளோம் என்றார்.