பழனியம்மாளுக்கு உதவும் தலைமைக் காவலர் திருமுருகன். 
தமிழகம்

திக்குத் தெரியாமல் நின்ற பழனியம்மாளுக்கு திசை காட்டிய தலைமைக் காவலர் திருமுருகன்!

கரு.முத்து

பெற்ற பிள்ளைகள் இருந்தும் அவர்களிடம் செல்ல விருப்பமில்லாமல் பேருந்து நிலையத்தில் இரண்டு நாட்களாகத் தங்கியிருந்த பெண்மணியைக் கரிசனத்தோடு அணுகி உரிய வழிகாட்டியிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர்.

திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் திருமுருகன். இன்று (ஜூலை 5) முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் காலை முதலே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அங்கு உட்கார்ந்திருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரைப் பார்த்துவிட்டு அவரை அணுகி அக்கறையுடன் விசாரித்திருக்கிறார்.

நல்ல மனநிலையில் முழு உடல் நலத்துடன் இருந்த பழனியம்மாள் என்ற அந்தப் பெண்மணி, தன்னைப் பற்றிய முழு தகவல்களையும் ஆதாரத்துடன் சொல்லியிருக்கிறார். அவரது கணவர் பெயர் பாலகிருஷ்ணன், ஊர் புதுக்கோட்டை என்ற தகவல்களுடன் அவரது மகன் திருமயத்தில் மளிகைக் கடை வைத்துள்ளதையும், மகள் திருமணமாகி பேராவூரணியில் வசிப்பதையும் சொல்லியிருக்கிறார்.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றதாகவும் மூன்று மாதம் மட்டும் வேலை பார்த்த நிலையில பொதுமுடக்கம் காரணமாக தற்போது வேலை இல்லை என்பதால் அங்கிருந்து கிளம்பி விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

மண்டலத்துக்குள் பேருந்துகள் ஓடியதால் திருப்பூரில் இருந்து கரூர் வரை பேருந்து மூலமாக வந்த பழனியம்மாள், ஜூலை முதல் தேதியிலிருந்து திரும்பவும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டதால் கரூரிலிருந்து நடந்தே திருச்சிக்கு வந்திருக்கிறார். ஆனால், என்ன காரணத்தாலோ அதற்கு மேல் தனது சொந்த ஊரை நோக்கிப் பயணிக்க பழனியம்மாளுக்கு விருப்பமில்லை. அதனால் நேற்று முதல், திருச்சி பேருந்து நிலையத்திலேயே தங்கியிருந்திருக்கிறார்.

முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தால் நேற்று இரவிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. இந்த நிலையில்தான் தலைமைக் காவலர் திருமுருகனின் கண்ணில் பட்டிருக்கிறார். பசியில் இருந்த அவருக்கு உடனடியாக உணவு தண்ணீர் மற்றும் பிஸ்கட் வாங்கிக் கொடுத்துச் சாப்பிட வைத்து ஆசுவாசப்படுத்தி இருக்கிறார் திருமுருகன். பின்னர்தான் அவரின் மகன் மற்றும் மகளின் தொலைபேசி எண்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார்.

அந்த எண்களில் தொடர்புகொண்ட அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவர்களிடமிருந்து பழனியம்மாளுக்கு ஆதரவான பதிலைப் பெற முடியவில்லை. இதனால் அந்தத் தாய்க்கு தானே ஒரு மகனாக மாறி முடிவு எடுத்தார் திருமுருகன். அந்தத் தருணத்தை அவரே விவரிக்கிறார்.

"மகன்கிட்ட பேசியபோது அவர் பிடி கொடுக்கவே இல்லை. 'எங்க பேச்சை கேட்காம போனாங்க. இப்ப அனுபவிக்கட்டும், என்னால இப்ப ஒன்னும் செய்ய முடியாது' என்று சொல்லிவிட்டார். அவரைச் சமாதானப்படுத்தி அம்மாவை வந்து கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னேன். 'இப்ப ஊரடங்கா இருக்கதால என்னால வர முடியாது' என்றார். 'நானே கொண்டு வந்து விடுகிறேன்' என்றேன். ஆனாலும் அவரிடம் அதற்கு வரவேற்பில்லை.

சரியென்று பேராவூரணியில் இருக்கும் அவரது மகளிடமும் அடுத்து பேசினேன். மருமகன்தான் பேசினார். 'மாமியார் எங்களுடன்தான் இருந்தார். நல்ல முறையில் கவனித்துக்கொண்ட போதிலும் அவர் சண்டை போட்டுவிட்டுப் போய்விட்டார். ஆனாலும் இப்போது அவரை வைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கு அவர் தயாராக இருக்கிறாரா என்று முதலில் கேளுங்கள்' என்று மருமகன் சொன்னார்.

இதைப் பற்றி பழனியம்மாளிடம் பேசியபோது இரண்டு பேரிடத்திலும் செல்ல தனக்கு விருப்பமில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டார். இப்படிப்பட்ட குழப்பத்தில்தான் அவர் இரண்டு நாட்களாக எங்கும் செல்லாமல் பேருந்து நிலையத்திலேயே தங்கி இருந்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

இதனையடுத்து அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்று முடிவெடுத்து அவரிடம் கேட்டேன். ஒப்புக்கொண்டார். இந்த முடிவை அவரது மகன் மற்றும் மகளுக்கும் செல்போனில் மீண்டும் அழைத்துக் கேட்டபோது அவர்களும் 'சரி' என்றார்கள்.

அதனையடுத்து, திருச்சி கிராப்பட்டியில் உள்ள கங்காரு முதியோர் இல்லத்தில் கொண்டு போய் பழனியம்மாளை ஒப்படைத்தேன். அந்த அம்மாவும் மகிழ்ச்சியோடு அங்கே இருக்கிறார்" என்று சொல்லி முடித்து பெருமூச்சு விட்டார், தலைமைக் காவலர் திருமுருகன்.

SCROLL FOR NEXT