புதுச்சேரியில் இன்று 28 பெண்கள் உட்பட புதிதாக 43 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 946 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூலை 5) 43 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 946 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 484 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 448 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் 442 பேருக்குப் பரிசோதனை செய்ததில் தற்போது புதுச்சேரியில் 33 பேர், ஏனாமில் 10 பேர் என மொத்தம் 43 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 15 பேர், பெண்கள் 28 பேர் ஆவர்.
இவர்களில் 18 வயதுக்கு உட்பட்டோர் 11 பேரும், 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டோர் 29 பேரும், 60 வயதுக்கு உட்பட்டோர் 3 பேரும் அடங்குவர்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 284 பேர், ஜிப்மரில் 132 பேர், கோவிட் கேர் சென்டரில் 24 பேர், காரைக்காலில் 19 பேர், ஏனாமில் 13 பேர், மாஹேவில் 8 பேர், பிற பகுதியில் 4 பேர் என மொத்தம் 484 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 16 பேர், ஜிப்மரில் 12 பேர், கோவிட் கேர் சென்டரில் 6 பேர், காரைக்காலில் 9 பேர் என மொத்தம் 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 448 ஆக அதிகரித்துள்ளது. 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 20 ஆயிரத்து 186 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 18 ஆயிரத்து 848 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 365 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது" எனத் தெரிவித்தார்.