இளைஞர்கள் புதுமைகளை படைப்பதன் மூலம் நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் வலியுறுத்தியுள்ளார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் ‘ஆருஷ் 2015’ தொழில்நுட்ப விழாவை நேற்று முன்தினம் தொடங்கி வைத்த வி.கே.சரஸ்வத் பேசும் போது, “நாட்டின் நீடித்த வளர்ச் சிக்கு கல்வியும் பயிற்சியும் தவிர்த்து சுற்றுச்சூழல், சமூக மற் றும் பொருளாதார அம்சங் களும் முக்கியமாகும். நகர்ப்புற கட்டமைப்புகளை திட்டமிடும் போது அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை புறம் தள்ளிவிடக் கூடாது. இளைஞர்கள் தங்களது படைப்பாற்றலைக் கொண்டு புதுமைகளைப் படைத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும்” என்றார்.
புதுமையும் உற்சாகமும் சேர்ந்த படைப்புகள் இந்தியாவுக்கு அவசியம் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பிரபிர் கே.பக் ஷி கூறினார். இந்த விழா பல புதிய கருத்துகளை செயல்படுத்த இடமளிக்கும் என்று ஆருஷ் விழாவின் ஒருங்கிணைப்பாளர் ஏ.ரத்தினம் தெரிவித்தார். இந்த விழாவில் 10 பயிற்சிப் பட்டறைகள், 50 நிகழ்வுகள், 5 கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 4 நாட்களில் 7 சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
முதல் நாளான நேற்று தேர்தல் கருத்துக் கணிப்புகள் குறித்து இந்திய கணித அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் ராஜீவ் கரண்திகர் பேசும்போது, “இந்தியா போன்ற பெரிய நாட்டில் குறைந்த சதவீத வாக்குகள் பெற்றாலும் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடிகிறது.
இந்திரா காந்தி இறந்த பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற தனிப் பெரும்பான்மைக்கு பிறகு வேறு யாரும் பெரும்பான்மை பெறவில்லை. விகிதாச்சார பிரதி நிதித்துவ முறையில் மக்களின் உண்மையான எண்ணங்கள் பிரதிபலிக்கப்படும்.
ஆனால், அப்படியொரு முறைக்கு இந்தியா இன்னும் முதிர்ச்சி பெறவில்லை. தேர்தலுக்கு நெருக்கமான நேரத் தில் வெளியிடப்படும் கருத் துக் கணிப்புகள் மக்களின் முடிவுகள் மீது ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. 2011-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று வெகு சிலர் மட்டுமே கணித்தனர். சொந்த விருப்பு வெறுப்புகளை நீக்கிவிட்டு நடத்தப்படும் முறை யான கருத்து கணிப்புகள், பெரும் பாலான நேரங்களில் சரியான முடிவுகளையே தரும்” என்றார்.
சிறப்பு சொற்பொழிவு
மக்களுக்கு பயன்படக் கூடிய செல்போன் செயலிகளை கண்டு பிடித்து ‘கோ டைமன்ஷன்ஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வரும் பள்ளி மாணவ சகோதரர்கள் ஷ்ரவண் குமார் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோரின் சிறப்பு சொற்பொழிவு நாளை நடைபெறுகிறது.