அரசு அறிவித்த மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகையை இளம் வழக்கறிஞர்கள் பெற, என்னென்ன தகுதிகள் என்பது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் இளம் வழக்கறிஞர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகையை அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் என்ன என்பதை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது.
அதன்படி, பார் கவுன்சிலில் பதிவு செய்து அகில இந்திய தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள இளம் வழக்கறிஞர்கள் 2 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகையை பெற முடியும். உதவித்தொகை கோரி விண்ணப்பிப்பவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 30 வயதுக்கு உட்பட்டவராகவும், குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒருமுறை, தான் பயிற்சி பெறும் மூத்த வழக்கறிஞரிடம் இருந்து தொடர்ந்து தொழில் புரிவதற்கான அத்தாட்சிசான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கவேண்டும். பார் கவுன்சிலில் பதிவுசெய்து 3 ஆண்டுகளுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சொந்தமாக 4 சக்கர வாகனம் வைத்திருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.
தகுதியுள்ள வழக்கறிஞர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் இணையதளம் மூலம்ஜூலை 6 (நாளை) முதல் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு சட்டக்கல்வி இயக்குநரால் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ளவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.