ஜே.ஜேம்ஸ் 
தமிழகம்

பொருளாதாரம் முடங்காத வகையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள்; குறுந்தொழில்முனைவோர் சங்கம் வலியுறுத்தல்

ஆர்.கிருஷ்ணகுமார்

மக்களின் பொருளாதாரம் முடங்காத வகையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சங்கத் தலைவர் ஜே.ஜேம்ஸ் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:

"கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் 7 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்.

அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தால், வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார். அதேபோல, அவருடன் நெருங்கிய பழகியவர்களையும் பரிசோதித்து, தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பும் ஏறத்தாழ 22 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

இது அந்தக் குடும்பங்களுக்கு பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துகிறது. தனிமைப்படுத்தப்பட்ட காலங்களுக்கு அரசு எவ்வித உதவிகளும் செய்யாததால், கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.

மேலும், சுகாதார மையங்களில் பரிசோதிக்கப்படுகிறவர்களுக்கு தொற்று இல்லை என்றாலும், அதற்கான சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுவதும் இல்லை. இதனால் தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் பல நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.

ஒரு பகுதியில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அந்தப் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தனி மனிதருக்கு தொற்று ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்களை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும். மற்றவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால், அந்தப் பகுதிகளை உடனடியாக தனிமைப்படுத்துவதில் இருந்து விடுவிக்க வேண்டும்.

நோய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல பாதிப்புக்கு உள்ளாகாத மக்களின் வாழ்வாதாரமும் முக்கியம் என்பதை அரசு உணர்ந்து, பாதிப்புக்கு உள்ளாகாத மக்களின் பொருளாதாரம் முடங்காத வகையில், தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்"

இவ்வாறு ஜே.ஜேம்ஸ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT