தமிழகம்

கலைஞர் சமாதிக்குச் சென்ற பிறகே சிகிச்சைக்குச் சென்றார்: ஜெ.அன்பழகன் படத்திறப்பு நிகழ்வில் ஸ்டாலின் கண்ணீர்

செய்திப்பிரிவு

ஜெ.அன்பழகன் படத்திறப்பு நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின், கண்களில் நீர்வழிய குரல் உடைந்து உருக்கமுடன் பேசினார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் கரோனா நிவாரணப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவரது பிறந்த நாள் அன்றே காலமானார்.

ஜெ.அன்பழகன் தனிப்பட்ட முறையில் திமுக தலைவர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் அவரது மறைவு திமுகவுக்கு மட்டுமல்ல திமுகவின் தலைவர் ஸ்டாலினுக்கும் பெரிய இழப்பாகும்.

மறைந்த ஜெ.அன்பழகனின் படத்தை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அவரது இல்லத்தில் திறந்து வைத்து காணொலி மூலமாக திமுக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் ஜெ.அன்பழகன் குறித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அந்த நேரத்தில் ஸ்டாலின் குரல் உடைந்து கண்களில் கண்ணீர் வழியப் பேசினார்.

ஜெ.அன்பழகன் படத்தைத் திறந்துவைத்து திமுக தலைவர் ஸ்டாலின் உரை:

''கடந்த மூன்று மாதகாலமாக எத்தனையோ காணொலிக் காட்சி கலந்துரையாடல்கள், ஆலோசனைக் கூட்டங்கள், மாவட்டச் செயலாளர்களோடு ஆலோசனை, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடல் என நடத்தி இருக்கிறேன்.

ஆனால், இன்றைய தினம் மிகவும் மனம் சோர்ந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. எனக்கு அருகில் இருந்து தினமும் செயல்பட்ட, பக்கத்து நாற்காலியில் இருந்து பொதுக்கூட்டங்களை நடத்திய என் சகோதரர் ஜெ.அன்பழகனைப் படமாகப் பார்க்க வேண்டி வரும் என்று நிச்சயம் நான் நினைக்கவே இல்லை.

காலமெல்லாம் நம்மோடு இருந்து கட்சியை கம்பீரமாக ஆக்கி - தோழனாய் - வழிகாட்டியாய் வாழ்ந்திருக்க வேண்டிய ஜெ.அன்பழகன் நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டுப் போய்விட்டார். இது ஏதோ சென்னை மேற்கு மாவட்டக் கழகத்துக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல, ஒட்டுமொத்த சென்னைக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல, தலைமைக் கழகத்துக்கே ஏற்பட்ட இழப்பு. தமிழ்நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு.

இன்னும் சொல்லப்போனால், தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட இழப்பு. பன்முக ஆற்றல் கொண்டவராக ஜெ.அன்பழகன் இருந்தார். கழகப் பணிகள் - மக்கள் பணிகள் - பொதுநலச் சேவைகள் ஆகியவற்றில் எப்போதும் மூழ்கியே இருப்பார். ஊர்வலங்கள் - பொதுக்கூட்டங்கள் - ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்றால் பிரமாண்டத்தைக் காட்டுவார். அந்தப் பிரம்மாண்டங்கள் அழகாகவும் வியப்பாகவும் இருக்கும்.

சட்டப்பேரவையில் சிங்கம் மாதிரி கர்ஜிப்பார். தொலைக்காட்சி விவாதங்களில் எவர் வாதத்தையும் அடித்து நொறுக்குவார். திரைப்படங்களைத் தயாரித்தார். விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இப்படி ஜெ.அன்பழகன் எதையுமே விட்டு வைக்கவில்லை.

ஒரு மாவட்டச் செயலாளர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடந்தவர் மட்டுமல்ல, ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்தவர் மட்டுமல்ல, ஒரு சகோதரர் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாகவும் இருந்தவர் ஜெ.அன்பழகன்.

சரி என்றால் உடனே பாராட்டுவார்; தவறு என்று பட்டால் உடனே சுட்டிக் காட்டுவார். தயங்கமாட்டார்; நமக்கென்ன என்று இருக்கமாட்டார். திமுக பொதுக்குழு, செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என எந்தக் கூட்டமாக இருந்தாலும் தொண்டர்களின் உணர்வைப் பிரதிபலிக்கின்ற வகையில் பேசக் கூடியவர். ஒவ்வொரு நாளும் திமுக தன்னால் வளரவேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டவர் ஜெ.அன்பழகன்.

அவருடைய உடல் நிலைமை என்பது நம் அனைவருக்குமே தெரியும். 1996-ம் ஆண்டு லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்தார். அவர் மீண்டும் சென்னை திரும்பியபோது, விமான நிலையத்துக்கு நானே சென்றேன். அவரை வரவேற்று அழைத்து வந்து நேராக கோபாலபுரம் சென்றோம். தலைவர் கலைஞரிடத்தில் அவரை அழைத்துச் சென்றேன்.

லண்டன் சென்ற தன் சொந்த மகன் சிகிச்சை பெற்று வந்ததைப் போலத் தலைவர் கலைஞர் அன்றைய தினம் மகிழ்ந்தார். இன்றைக்குத் தலைவர் கலைஞரும் இல்லை; ஜெ.அன்பழகனும் இல்லை. இருவருமே அடுத்தடுத்து நம்மை விட்டு மறைந்துவிட்டார்கள்.

தலைவர் கலைஞரை மேடையில் வைத்துக்கொண்டே, "நான் போனஸ் வாழ்க்கை வாழ்கிறேன். என்னுடைய உடல்நிலை பற்றி அனைவருக்கும் தெரியும். என்னுடைய வாழ்க்கை எப்போதும் முடியலாம். அப்போது எனது உடல் மீது உங்களது கண்ணீர் விழ வேண்டும் தலைவரே" என்று பேசினார் ஜெ.அன்பழகன்.

அந்த உணர்ச்சிகரமான உரையைக் கேட்டு அனைவரும் கைதட்டினார்கள். ஆனால் அடுத்துப் பேசிய தலைவர் கலைஞர் சொன்னார். "நீங்கள் அனைவரும் கைதட்டினீர்கள். ஆனால் ஜெ.அன்பழகன் சொல்வதைக் கேட்கும்போது என் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும்" என்று தலைவர் கலைஞர் சொன்னார். ஜெ.அன்பழகன் பேச்சைக் கேட்டுக் கலங்கிவிட்டார் தலைவர் கலைஞர் .

அப்படிப்பட்ட கலங்கிய இதயத்தோடுதான் நான் உங்கள் முன்னால் இன்று இருக்கிறேன். ஜெ.அன்பழகனின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு நானே எப்படி ஆறுதல் சொல்லிக் கொள்வது? பழக்கடை ஜெயராமன் குடும்பம் என்பது தனிப்பட்ட ஒரு மனிதனின் குடும்பம் அல்ல, அது திமுக குடும்பம். கருப்பு சிவப்பு குடும்பம்.

ஜெ.அன்பழகன் இருந்த குடும்பம், தலைநகர் சென்னையில் தலைசிறந்த திமுக குடும்பம், கட்சிக்காக உயிர் கொடுத்த குடும்பமாகவும் பழக்கடை அன்பழகன் அவர்களது குடும்பம் மாறிவிட்டது.

கரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய - மாநில அரசுகள் உதவி செய்யாமல் அநாதைகளைப் போலக் கைவிட்டபோது திமுகதான் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலமாக உதவிகள் செய்யத் தொடங்கியது.

நோய்த் தொற்றைத் தடுக்கக் கூடிய உபகரணங்கள் முதல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவுப்பொருள்கள், காய்கறிகள், மருந்துப் பொருட்கள் கொடுத்தோம்.

பல்வேறு இடங்களில் உணவைத் தயாரித்தும் கொடுத்தோம். இந்தக் களப்பணியில் முன்னின்று கடமையாற்றிய செயல்வீரர்தான் ஜெ.அன்பழகன். அவரது உடல்நிலை குறித்து நான் அறிந்த காரணத்தால், “நீ ரொம்ப அலையாதே அன்பு. வீட்டில் இருந்தபடியே பணிகளைக் கவனி” என்றுதான் சொல்லி இருந்தேன்.

தினமும் காலையும் மாலையும் நான் தொலைபேசியில் பேசுவேன். இல்லாவிட்டால் அவர் பேசுவார். இன்றைய தினம் என்னென்ன பணிகளைப் பார்த்தோம், எங்கெங்கு உதவிகள் செய்தோம் என்று சொல்வார். அப்போதும், “அதிகமாக அலையாதே அன்பு” என்றுதான் நான் சொல்வேன். அவர் எனக்கு அறிவுரை சொல்வார். ''நீங்க வெளியே போகவேண்டாம் தலைவரே, எல்லாப் பணிகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்று எனக்குச் சொல்வார்.

கரோனாவில் இருந்து மக்களைக் காக்கப் போராடியவர், கரோனாவுக்கே பலியாக வேண்டியதாகிவிட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தாளமுத்துவையும் நடராசனையும் இழந்தோம்.

இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில் விருகம்பாக்கம் அரங்கநாதனை இழந்தோம் என்பதைப் போல கரோனா எதிர்ப்புப் போரில் ஜெ.அன்பழகனை இழந்தோம் என்று சொல்லும் அளவுக்கு வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். அதனால்தான் அவர் இறந்தபோது நான் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டுக்காகப் போராடி உயிரிழந்த ராணுவ வீரரின் தியாகத்துக்கு இணையானது கரோனா தடுப்புப் பணிக்காகப் போராடி உயிரிழந்த என் சகோதரர் அன்பழகனின் தியாகமும்’ என்று நான் குறிப்பிட்டேன்.

திமுகவைப் பொறுத்தவரையில் ஒரு தொண்டன், நூறு பேருக்குச் சமம். திமுகவின் ஒரு மாவட்டச் செயலாளர் என்றால் ஆயிரம் பேருக்குச் சமம் என்கிற அளவுக்கு யானை பலத்துடன், அதிக பலத்துடன் வலம் வந்த வேங்கைதான் நம்முடைய ஜெ.அன்பழகன்.

உடல்நலமில்லை என்றதும் நேராகத் தலைவர் கலைஞர் துயில்கொள்ளும் கடற்கரைக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் மருத்துவமனைக்கே சென்றார் என்பதை விடக் கட்சியின் மீதும், கலைஞர் மீதும் அவர் வைத்திருந்த அன்புக்கு வேறு ஆதாரம் சொல்ல வேண்டியதில்லை.

மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டது முதல், நான் நிலைகொள்ளாமல் இருந்தேன். மருத்துவர்களுடன் பேசிக் கொண்டே இருந்தேன். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தோம். ஆனாலும் அவரால் மீள முடியவில்லை.

நம்மை மீளமுடியாத துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார். மாவட்டக் கட்சியை அவர் எத்தகைய கம்பீரத்துடன் நடத்தினாரோ அதேபோல் நடத்தப்பட வேண்டும். ஜெ.அன்பழகனோடு தோளோடு நின்ற தோழர்கள் அனைவருமே ஜெ.அன்பழகனைப் போலவே உற்சாகமாக, கம்பீரமாக, தொய்வில்லாமல் பணியாற்ற வேண்டும்.

கட்சிக் கோட்டையாக இருக்கும் தலைநகர் சென்னையைக் காக்கும் பெரும் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் இருக்கிறது. ஜெ.அன்பழகன் நம்மோடு இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தோடு நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும்.

ஜெ.அன்பழகன் குடும்பத்தினர் அனைவருக்கும் என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. கோடிக்கணக்கான திமுக குடும்பத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களது துன்ப துயரங்களில் நாங்களும் பங்கெடுக்கிறோம். என்றென்றும் துணை நிற்போம். மறைந்த ஜெ.அன்பழகன் உங்கள் குடும்பத் தலைவர் மட்டுமல்ல எங்கள் அனைவர் குடும்பத்திலும் ஒருவர்.

ஜெ. அன்பழகனின் சிரித்த முகத்தை யாரும் மறக்க முடியாது. அவர் சிந்திய வியர்வையும் ரத்தமும் வீண்போகாது. ஜெ.அன்பழகனின் புகழ், மங்காது; மறையாது. வாழ்க என் சகோதரர் ஜெ.அன்பழகனின் புகழ்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT