செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகள் மற்றும் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
அதேசமயம், சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் இதுவரை பாதிப்பு பெரிய அளவில் இல்லை.கடந்த மே மாதத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து மாமல்லபுரம் வந்த 5 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்துவிட்டனர். இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக மாமல்லபுரம் பேரூராட்சி பகுதிகளில் நோய் தொற்று இல்லை.
இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் லதா கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொற்று அதிகரித்ததால் வெளிநாட்டவர்கள் அதிகம் வந்து சென்ற சுற்றுலா தலமானமாமல்லபுரத்தில் பாதிப்பு அதிகம் இருக்கும் என கருதப்பட்டது.
ஆனால், பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள், தன்னார்வலர்களின் உதவியோடு ஒவ்வொருவீட்டுக்கும் சானிடைசர், முகக்கவசம் வழங்கப்பட்டன, இதுதவிர அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் வழங்கி வரும் ஒத்துழைப்பு ஆகியவற்றால் கடந்த ஒரு மாதமாக வைரஸ் தொற்று இல்லாத பேரூராட்சியாக விளங்கி வருகிறது. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.