காசிமேடு துறைமுகத்தில் மீன்பிடித்தல் மற்றும் மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு, ஃபைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதுதவிர, மீன் விற்பனையிலும் ஈடுபட்டனர். இதனால்,காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியும் கேள்விக்குறியாகியது. இதைத் தொடர்ந்து, மீனவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்க மீன்வளத் துறை முடிவு செய்து, விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இந்நிலையில், அனுமதி சீட்டு கேட்டு 11 ஆயிரம் மீனவர்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி மற்றும் விற்பனைக்கான அனுமதி கோரி 11 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்ப பரிசீலனை நடந்து வருகிறது. சென்னையில் தற்போது மீன்பிடி மற்றும் மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு அனுமதி அளித்தவுடன் மீனவர்களுக்கு அனுமதி சீட்டு விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.