மதுராந்தகம் அரசு தலைமை மருத்துவரின் இறப்பிற்கு இழப்பீடாக தமிழக அரசு அறிவித்த 50 லட்சம் ரூபாயும், மத்திய அரசு அறிவித்த மருத்துவர் காப்பீடு 50 லட்சம் ரூபாயும் சேர்த்து ஒரு கோடி ரூபாயாக அவரது குடும்பத்திற்கு அளித்திட வேண்டுமென அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு (FOGDA) இன்று வெளியிட்ட அறிக்கை:
''மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுகுமாரன் MBBS,DO கரோனா பெருந்தொற்று காரணமாக சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது. மருத்துவர் மரணத்திற்கு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு ஆழ்ந்த இரங்கலையும் , அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஒவ்வொரு நாளும் கரோனா போர்க்களத்தில் அரசு மருத்துவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாவதும், தற்பொழுது அரசு தலைமை மருத்துவர் ஒருவர் நோய்த்தொற்றின் காரணமாக விலை மதிக்கமுடியாத உயிரை இழந்திருப்பதும் அரசு மருத்துவர்களிடையே பேரதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
தமிழக அரசு போர்க்களத்தில் முதல் நிலை வீரர்களாக இருக்கின்ற மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்
மதுராந்தகம் அரசு தலைமை மருத்துவரின் இறப்பிற்கு இழப்பீடாக தமிழக அரசு அறிவித்த 50 லட்சம் ரூபாயும், மத்திய அரசு அறிவித்த மருத்துவர் காப்பீடு 50 லட்சம் ரூபாயும் சேர்த்து ஒரு கோடி ரூபாயாக உடனடியாக அவரது குடும்பத்திற்கு அறிவித்திட, அளித்திட வேண்டுமென இக்கூட்டமைப்பு (FOGDA)கேட்டுக்கொள்கிறது.
அரசு மருத்துவருடைய நல்லடக்கம் ஒரு போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரனது நல்லடக்கத்தைப் போல, முழு அரசு மரியாதையுடன் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற இக்கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. கரோனா எதிர்ப்புப் போரில் வீர மரணமடைந்த தலைமை மருத்துவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை உடனடியாக வழங்கவேண்டுமென இக்கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
மேலும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்ளும் மருத்துவர்கள் பாதுகாப்புடன் பணிசெய்யும்படி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்''.
இவ்வாறு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.