கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்னை மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.
எனவே பொதுமக்கள் பொது இடங்களில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிவதும், சானிடைசர் பயன்படுத்துவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை அலட்சியப்படுத்தாமல் கடைபிடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மார்த்தாண்டத்தை அடுத்துள்ள திக்றிச்சியில் பெண்ககள்,, சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுளளனர்.
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் நடந்த திருமணத்தின்போது சுகாதாரத்துறையனர் பரிசோதனை செய்தபோது மணப்பெண்ணின் தாயாருக்கு கரோனா இருப்பது உறதி செய்யப்பட்டது. இதனால் மணமகன், மணமகள் உட்பட 37 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 16 கர்ப்பிணிகள் உட்பட 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி பேரூந்து நிலையத்தில் செயல்பட்ட காய்கறி சந்தையில் 9 வியாபாரிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வடசேரி பேரூந்து நிலையம் மூடப்பட்டு பொதுமக்கள் நுழையாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அங்கு காய்கறி வாங்க சென்ற மக்கள் கரோனா அச்சத்தில் உள்ளனர். குமரி மாவட்டத்தில் தற்போது கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 576 பேராக உயர்ந்துள்ளது.