கோவை மாவட்டத்தில் 5,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 3) நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத், மாநகரக் காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் கே.பெரியய்யா மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கோவை மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் அதிகமாகவும், நோய்த் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் உள்ளது.
மாவட்டத்தில் 10 லட்சம் குடும்பங்களுக்கு, கபசுரக் குடிநீர், ஆர்சனிக் ஆல்பம், ஜிங்க் மாத்திரைகள், மல்டி விட்டமின் மாத்திரைகள் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறை மூலம் 5,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இவற்றில், சளி, காய்ச்சல் தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
கடந்த மே 25-ம் தேதி முதல் இதுவரை 131 விமானங்களில் 19 ஆயிரத்து 161 பயணிகள் வந்துள்ளனர். இவர்களில் 111 பேருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 60 ஆயிரத்து 282 பேருக்குப் பரிசோதனை மேற்கொண்டதில், 608 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு, 318 பேர் பூரண குணடைந்துள்ளனர். 287 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல, 8,302 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சிகிச்சைக்காக 4,685 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன".
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
தொடர்ந்து, கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படம் பிரத்யேக கண்காணிப்பு மையத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.
அம்மா உணவகங்களில் 16 லட்சம் பேர் பயன்
இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறும்போது, "கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களுக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்பில் பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 113 பேர், நகராட்சிப் பகுதிகளில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 272 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சத்து 71 ஆயிரத்து 313 பேருக்கு உணவுடன் முட்டையும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 16 லட்சம் பேர் பயடைந்துள்ளனர்.
அம்மா உணவங்களில் மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்கப்பட்டு, அதற்கான செலவுத் தொகை ரூ.94.83 லட்சம் அதிமுக மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றாளர்களுக்கு சத்து மிகுந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.