சாலை விபத்துகளை விடவும் கோரமானது தீ விபத்து. இந்தியாவில் ஆண்டுதோறும் தீ விபத்துகளால் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 10 லட்சம் பேர் முகம், கை, கால்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அன்றாட வாழ்வை இழக்கிறார்கள்.
இவ்வாறு பாதிக்கப்படுபவர்களின் கவலைகளைத் தீர்க்க முன்வந்துள்ள கோவை மெட்ரோபோலிஸ் ரோட்டரி சங்கம் மற்றும் கங்கா மருத்துவமனை ஆகியவை, 'ஹோப் ஆஃப்டர் ஃபயர்' (Hope after fire) என்ற திட்டம் மூலம் மறுவாழ்வை வழங்குகின்றன.
தீ விபத்துகளில் சிக்குவோரின் உயிரைக் காப்பாற்றினாலும், உடல் உறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்ய அறுவை சிகிச்சைகள் அவசியமாகின்றன. எனினும், ஏழைகளுக்கு இம்மருத்துவம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனால், பாதிப்புகளுடனேயே வாழும் சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
இவர்களுக்கு உதவுவதற்காக 2012 மார்ச் 12-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் 'ஹோப் ஆஃப்டர் ஃபயர்' திட்டம் மூலம் இதுவரை ரூ.5.04 கோடி மதிப்பில் 550 பேருக்கு 905 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமின்றி, கேரளா, டெல்லி, லக்னோ என நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோரும் இதில் பயனடைந்துள்ளனர்.
இதற்கு நிதியுதவி வழங்கி வரும் கோவை மெட்ரோபோலிஸ் ரோட்டரி சங்கம் தற்போது மேலும் ரூ.3 கோடி செலவிடத் திட்டமிட்டுள்ளது. இதற்கு சர்வதேச ரோட்டரி அறக்கட்டளை மூலம், அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் ரோட்டரி சங்கமும் நிதியுதவி வழங்கியுள்ளது. அண்மையில் இணையதளம் வழியாக இத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இதுகுறித்து இத்திட்டத்தின் தலைவரும், கங்கா மருத்துவமனை நிர்வாக இயக்குநருமான மருத்துவர் எஸ்.ராஜசபாபதி கூறும்போது, "இது எங்களுக்கு மிகவும் ஆத்மார்த்தமான பணி. தீ விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்றிவிடுகிறோம். அதன்பின் அவர்களது உடலில் ஏற்படும் காயங்களுக்கும், செயல்படாத நிலைக்கும் சிகிச்சையளிக்க வேண்டும். பண வசதி இல்லாத நோயாளிகள் பலர் உரிய சிகிச்சை கிடைக்காமல் அன்றாட வாழ்க்கையை இழந்து துன்பப்படுகிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே எங்களது நோக்கம்.
தீ விபத்தால் ஏற்பட்ட உறுப்புகள் செயல்படாத நிலையை அறுவை சிகிச்சையால் சரிசெய்ய முடியும். கோவை மெட்ரோபோலிஸ் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோம். சிகிச்சையில் அதிக செலவு அறுவை சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம்தான். அதை முழுமையாக கங்கா மருத்துவமனை ஏற்றுக் கொள்கிறது.
சிகிச்சைக்குப் பின்பும், நோயாளி பூரண குணமடையும்வரை தொடர்ந்து கண்காணித்து, மருத்துவமும், ஆலோசனைகளும் வழங்குகிறோம். அதேபோல, வேலைவாய்ப்பு தேவைப்படுவோருக்கும் வழிவகை செய்கிறோம். தீ விபத்துகளில் பாதிக்கப்பட்டோர் பிறரைச் சார்ந்திருக்காமல், தங்களது அன்றாட வாழ்வுக்குத் திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
கோவை மெட்ரோபோலிஸ் ரோட்டரி சங்கத் தலைவர் பி.ஆர்.விட்டல் கூறும்போது, "ரோட்டரி மாவட்டம் 3,201 அமைப்பின் வரலாற்றில் ஒரு திட்டத்துக்கு ரூ.3 கோடி செலவிடுவது இதுவே முதல் முறை. இத்திட்டத்தில் உதவி தேவைப்படுவோர் எங்களைத் தொடர்பு கொண்டு பயனடையலாம்" என்றார்.
தொடக்க விழாவில், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.மாதவ் சந்திரன், மாவட்ட ரோட்டரி அறக்கட்டளைத் தலைவர் ஜெய்சங்கர், மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தில் சிகிச்சை தேவைப்படுவோர் ரமேஷ் வீரராகவன், தருண் ஷா ஆகியோரை 9751576946, 9842244040 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.