படங்கள்: ஜோதி ரவிசுகுமார். 
தமிழகம்

ஓசூரில் தக்காளி உற்பத்தி 50% குறைவு: 3 மடங்கு விலை உயர்ந்த தக்காளி- கூடுதலாகப் பயிரிட தோட்டக்கலைத் துறை தீவிரம்

ஜோதி ரவிசுகுமார்

ஓசூர் பகுதியில் தக்காளி உற்பத்தி 50 சதவீதம் குறைந்ததன் காரணமாக சந்தைக்குத் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.40 முதல் ரூ.50 வரை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் தக்காளியின் விலையைக் கட்டுப்படுத்தக் கூடுதலாக 1000 ஹெக்டேரில் தக்காளி பயிரிட தோட்டக்கலைத் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சூளகிரி, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, மத்திகிரி, பாகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக தக்காளி. பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலிஃபிளவர், பீட்ரூட், உள்ளிட்ட தோட்டப் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இங்கு விளையும் தரமான மற்றும் சுவைமிகுந்த காய்கறிகள் சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினமும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதில் விவசாயிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டது.

குறிப்பாக ஓசூர் பகுதியில் அதிக அளவு உற்பத்தியாகி வரும் தக்காளியைச் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்ப முடியாமல் ஓசூர் சந்தையில் தக்காளி தேக்கமடைந்தது. இதனால் தக்காளி விலையில் கடும் சரிவு ஏற்பட்டு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.2-க்கும் கீழே விலை சரிவடைந்தது. சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையானது. இதனால் தக்காளி பயிரிட்ட செலவு கூடக் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தக்காளியைச் சாலையோரமாகக் கொட்டினர். ஒரு சிலர் கால்நடைகளுக்கு உணவாக அளித்தனர். மேலும் தக்காளி பயிரிடும் பரப்பளவைப் பாதியாகக் குறைத்துக் கொண்டனர்.

இதில் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி பயிரிடுவதைத் தவிர்த்து வேறு பயிர்களில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். இந்நிலையில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு பெங்களூரு உட்பட வெளியூர்களுக்குத் தக்காளியை அனுப்பும் பணி தொடங்கியதும் தக்காளியின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை சில்லறை விலையில் ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளியின் விலை தற்போது ரூ.40 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனைச் சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜாரெட்டி கூறும்போது, ''ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனைச் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர். கரோனா எதிரொலியாக இந்தச் சந்தை தக்காளிச் சந்தை, வெங்காயச் சந்தை, இதர காய்கறிகள் சந்தை என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே இடத்தில் கூட்டம் சேர்வது தவிர்க்கப்பட்டுள்ளது. ஓசூர் பகுதியில் தக்காளி உற்பத்திக் குறைவு காரணமாக சந்தைக்குத் தக்காளி வரத்து 50 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் பத்தலப்பள்ளி மொத்த விற்பனை சந்தையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனையான 25 கிலோ உள்ள ஒரு பெட்டி தக்காளியின் விலை, படிப்படியாக உயர்ந்து ரூ.750 முதல் ரூ.900 வரை விலை உயர்ந்துள்ளது'' என்றார்.

இதுகுறித்து தளி தோட்டக்கலை அலுவலர் சுப்பிரமணியன் கூறும்போது, ''இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. கரோனா ஊரடங்கு காரணமாகத் தக்காளி தேக்கமடைந்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் தக்காளி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. பயிரிடும் பரப்பளவு 1000 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.

தற்போது தக்காளி விலை அதிகரித்து வருவதால் விவசாயிகளிடையே மீண்டும் தக்காளி பயிரிடும் ஆர்வத்தை ஏற்படுத்த தோட்டக்கலைத் துறை மூலமாகத் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கூடுதலாக 1000 ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி பயிரிடவும் அதற்காக விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கு 20 ஆயிரம் தக்காளி விதைகளை இலவசமாக வழங்கவும் தோட்டக்கலைத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

SCROLL FOR NEXT