கோவில்பட்டியில் கரோனா பரிசோதனை மையத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை ஸ்ரீராம் நகரில் உள்ள நகர்நல மையம் கரோனா பரிசோதனை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கரோனா பரிசோதனை மையத்தை திறந்து வைத்து, பரிசோதனைகள் நடைபெறுவதை பார்வையிட்டார்.
தொடர்ந்து செண்பகவல்லி அம்பாள் கோயில் பின்புறம் உள்ள காந்தி மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக சந்தையில் நகராட்சி சார்பில் நடைபெறும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்.
பின்னர் கழுகுமலை தேர்வு நிலை பேரூராட்சியில் ரூ.12 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடை கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து தெற்கு கழுகுமலையில் ரூ.75 லட்சத்தில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். கழுகுமலை அருகே துலுக்கர்பட்டி கிராமத்தில் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகளில், சட்டப்பேரவை உறுப்பினர் பி.சின்னப்பன், கோட்டாட்சியர் ஜே.விஜயா, வட்டாட்சியர்கள் மணிகண்டன், பாஸ்கரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெண் காவலருக்கு கரோனா:
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பு காரணமாக 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண் காவலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் கோவில்பட்டியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலைய வியாபாரிகள், ஊழியர்களுக்கு நகராட்சி சார்பில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் உட்பட 11 பேரும், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கும் என 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா பாதிப்பு காரணமாக 37 ஆண்கள், 24 பெண்கள் என 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.