தமிழகம்

கடையநல்லூரைச் சேர்ந்த முதியவர் கரோனா பாதிப்பால் உயிரிழப்பு: செவிலியர்கள், காவலர் உட்பட மேலும் 20 பேருக்கு தொற்று

த.அசோக் குமார்

தென்காசி மாவட்டத்தில் கரோனா 392 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதில் 230 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துவிட்டார். கடையநல்லூரைச் சேர்ந்த முகமது யூசுப் (80) என்பவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு பரிசோதனை செய்ததில், கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 412 ஆக உயர்ந்துள்ளது.

வாவா நகரத்தைச் சேர்ந்த செங்கோட்டை வட்டார கிராம சுகாதார செவிலியர், கடையநல்லூரைச் சேர்ந்த கிராம சுகாதார செவிலியர், குற்றாலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவரும் கரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புளியரையில் இருந்து பணி மாறுதலில் வந்த இந்த காவலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் புளியரை மற்றும் குற்றாலம் காவல் நிலையங்கள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

பெங்களூருவில் இருந்து வந்த பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ததில் சுரண்டை, சுந்தரபாண்டியபுரம், இலஞ்சியைச் சேர்ந்த தலா ஒருவருக்கும், தென்காசியைச் சேர்ந்த 2 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த ஆலங்குளத்தைச் சேர்ந்த 4 பேர், கடையநல்லூரைச் சேர்ந்த 2 பேர், பெரும்பத்தூர், தென்காசி, வாசுதேவநல்லூரில் தலா ஒருவருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT